Published : 18 Feb 2024 05:04 AM
Last Updated : 18 Feb 2024 05:04 AM

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சதி: நடிகையின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: இந்தியாவில் விடுதலை புலிகள்அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், போதைப் பொருட்கள் விற்பனை, ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திரைப்பட கலைஞரின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கடந்த 2021-ம்ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது.

என்ஐஏ கொச்சி அதிகாரிகள் விசாரணையில், விடுதலை புலிகள்இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்கள், ஆயுதக்கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது இதையடுத்து, இந்த வழக்கில் இலங்கைதமிழர்கள் உட்பட 13 பேரை என்ஐஏகைது செய்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும், இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தவழக்கில் திரைப்பட நடிகை ஒருவரின் முன்னாள் உதவியாளர் சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, 14-வது நபராக அவரை கைதுசெய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆதிலிங்கம் மீதுபூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த வழக்கில் 16 பேர் மீதுகுற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,14-வது நபராக ஆதிலிங்கம் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்ததாக தெரிகிறது. மேலும், போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை, ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜெண்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார்.

இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பு நிர்வாகத்தில் பணிபுரிந்தபோது, இலங்கையை சேர்ந்தகுணசேகரன், அவரது மகன் திலீபன்உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும்போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x