Published : 18 Feb 2024 05:00 AM
Last Updated : 18 Feb 2024 05:00 AM
சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சட்டப்பேராட்டம் நடத்திவருகிறார் செந்தில் பாலாஜி.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011-15 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்குகளை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி,செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிஇதுவரை 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டும், அவரது ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தச்சூழலில் தற்போது 2-வதுமுறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நிலுவையில் உள்ளது.
கடந்த 240 நாட்களுக்கும் மேலாகசிறையில் உள்ள செந்தில் பாலாஜி,ஜாமீனில் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் அமலாக்கத் துறைதீவிரம் காட்டி வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகித்துவருவதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அமலாக்கத் துறை ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனக்கு ஜாமீன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இலாகா இல்லாத அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ள செந்தில் பாலாஜி, இம்முறை தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி மூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் குற்றச்சாட்டுப்பதிவை ஜன.22 அன்று மேற்கொள்வதை தள்ளி வைக்கக் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிபதி எஸ்.அல்லி, தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிதரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிக்குமார், குற்றச்சாட்டுப்பதிவை மீண்டும் தள்ளிப்போடும் வகையில் தற்போது இந்த வழக்கில் இருந்தே செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி புதிதாக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றால், அதன்பிறகு இதை வைத்தே உச்ச நீதிமன்றம் வரை மீண்டும் செல்லலாம் என்றும், அதற்குள் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எண்ணத்திலும் செந்தில் பாலாஜி தரப்பு சட்டப்பூர்வமாக காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் பிப்.21அன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவலை 21-வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, பிப்.20 வரை நீட்டித்துள்ளார்.
ஒருவேளை இந்த தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தாலும் அவர் மீதுள்ள இந்த வழக்கை காரணம் காட்டி திமுகவுக்கு எதிராகபாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்பதால், அவரை பழையபடிகொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலைப்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம் செந்தில் பாலாஜி, இழந்த தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வாரா? அல்லது உடல் நிலையைக் காரணம்காட்டி ஒதுங்கி இருப்பதுபோல காட்டிக்கொண்டு, பாஜகவுக்கு எதிரான திரைமறைவு வேலையில் ஈடுபடுவாரா? என்ற கருத்தும் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT