Published : 18 Feb 2024 04:58 AM
Last Updated : 18 Feb 2024 04:58 AM
சென்னை: வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப்பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்தது.
இதை விண்ணில் செலுத்துவதற்கான 27.30 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின்2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் நேற்று மாலை 5.35 மணிக்கு திட்டமிட்டபடி இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட 18நிமிடங்களில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 253 கிமீ தொலைவில் உள்ள புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோளானது மத்திய புவி அறிவியல் துறை, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வானிலை முன்னறிவுப்புக்கான தேசிய மையம், தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஓடி) ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர், பருவநிலை அளவீடு, தகவல் பரிமாற்றம் தொடர்பான சாதனங்கள் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தரை மற்றும் கடல் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து ஆய்வு செய்து துல்லியமான தட்பவெப்ப நிலை மற்றும் வானிலை தரவுகளை பெறமுடியும். காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களை அறிந்து, அதனைக் கொண்டு வானிலை முன்னெச்சரிக்கைகளையும், பேரிடர் சூழல் எச்சரிக்கைகளையும் நிகழ் நேரத்தில் சரியாக தர முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோன் மாற்றங்கள்.. இதுதவிர, விமானப் போக்குவரத்துக்கான சாதக சூழல், வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகள், புகைமூட்டம், பனி மூட்டங்களையும் புகைப்படங்களாக எடுத்து அதுகுறித்த தரவுகளை இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் வழங்கும். மேலும், மேகங்களில் உள்ள நுண் பொருள்கள், உறை பனியின் அடர்த்தி மற்றும் ஆழம், ஓசோன் மாற்றங்கள், கடல் மற்றும் தரையின் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT