Published : 09 Feb 2018 07:18 AM
Last Updated : 09 Feb 2018 07:18 AM
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க புதிதாக 40 மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் இருந்து தினமும் 8 ஆயிரம் லாரி மணல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மணல் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில், மதுரை கிளையின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மணல் குவாரிகளை முழு வீச்சில் இயக்கி மணல் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவீர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி, தமிழ்நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை இயக்குவதற்காக கனிமவளத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது 8 மணல் குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் இருந்து நாளொன்றுக்கு 4 ஆயிரம் லாரி லோடு மணல் கிடைக்கிறது. தமிழகத்தின் தினசரி மணல் தேவை 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லாரி லோடுகள். நீதிமன்ற தடை காரணமாக மணல் எடுக்கப்படாமல் இருந்ததால், மணல் தேவை 40 ஆயிரம் லாரி லோடுகளாக அதிகரித்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் மொத்தம் 40 மணல் குவாரிகள் ஒரு வாரத்துக்குள் திறக்கப்படும். மேலும் 20 மணல் குவாரிகளை இரண்டு வாரங்களில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மணல் இருப்பைப் பொறுத்து மணல் கிடைக்கும். சில குவாரிகளில் 30 லாரி மணல் கிடைக்கும். வேறு சில குவாரிகளில் 300 லாரி லோடுகள் வரை கிடைக்கும். தினமும் சராசரியாக 8 ஆயிரம் லாரி மணல் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT