Published : 17 Feb 2024 09:59 PM
Last Updated : 17 Feb 2024 09:59 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். “பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம்” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுக்கான மருந்து கலவை தயார் செய்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 3 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தானைச் சேர்ந்த அபேராஜ் (62), சிவகாசி கிளியம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24), கருப்பசாமி (20), ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (32), குருசாமி (50), சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த முத்து (43), ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (40), தொம்பக்குளத்தைச் சேர்ந்த சாந்தா (43), ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயா (36), கீழானமறைநாடு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (44) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32), ரெட்டியபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (21), முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி (34), சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம். இந்த விபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் மதுரை டிஐஜி ரம்யா பாரதி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான டோக்ரேபிரவீன் உமேஷ் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோர் மற்றும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT