Published : 17 Feb 2024 09:57 PM
Last Updated : 17 Feb 2024 09:57 PM
மேட்டூர்: உள்ளூரில் வைக்கோல் தட்டுப்பாட்டால், வெளிமாவட்டங்களில் இருந்து வைக்கோலை விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர், எடப்பாடி, பூலாம்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனம், கிணற்றுப் பாசனம் மற்றும் கால்வாய் பாசனம் மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் இரு போகத்தில் நெல், கரும்பு, வாழை, ராகி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, பல விவசாயிகள் சார்பு தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகளவிலான நெல் சாகுபடி மூலம், கால்நடைகளின் உலர் தீவனமான வைக்கோல், கால்நடை வளர்ப்போருக்கு கைகொடுத்து வந்தது. நடப்பாண்டில், பொங்கல் பண்டிக்கைக்காக அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடியும், குறைந்த பரப்பளவில் நெல் சாகுபடியும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் போக நெல் அறுவடைக்கு முன்பு பெய்த மழையால் நெற்கதிர்கள் மூழ்கியும் சாய்ந்தும் சேதமடைந்தன. இதனால் அறுவடையின் போது மகசூல் பாதிக்கப்பட்டது. வழக்கமாக, அறுவடை காலங்களில் உள்ளூர் தேவைக்கு போக, மீதமுள்ள வைக்கோலை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் நிலையில், தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: “எடப்பாடி, பூலாம்பட்டி, தேவூர், மேட்டூர் பகுதிகளில் அதிக நெல் சாகுபடி மூலம் உள்ளூர் கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைத்து வந்தது. தற்போது கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாலும், நெல் சாகுபடி பரப்பளவு குறைந்ததாலும், மழையாலும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாட்டை போக்க, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வைக்கோலை கொள்முதல் செய்து வருகிறோம்.
இனி வரும் காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் உள்ளூரில் ஒரு கட்டு (25 கிலோ) வைக்கோல் ரூ.120 முதல் ரூ.160 வரை கிடைத்தது. தற்போது, கூடுதல் விலை, போக்குவரத்து செலவு என வைக்கோல் கட்டு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு ரூ.250-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT