Published : 17 Feb 2024 09:25 PM
Last Updated : 17 Feb 2024 09:25 PM

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை தனது தலைமையில் சந்தித்து, கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். சத்தியமூர்த்தி பவனில் ஒரே ஒருமுறை மட்டுமே கோஷ்டி சண்டை நடைபெற்றுள்ளது. அதனால், டெல்லி தலைமையும், அழகிரியை மாற்றும் விவகாரத்தில் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் பொறுப்பேற்பார். தமிழக காங்கிரஸுக்கான கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அதேவேளையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ள செல்வபெருந்தகை, “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக செயல்படுவேன். இந்தியாவில் சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட இயக்கமாக காங்கிரஸ் செய்லபடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கு.செல்வப்பெருந்தகை. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பிறகு அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து மாநிலத் தலைவரானார்.

அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2-வது முறையாக எம்எல்ஏவான அவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக செயலாற்றி வந்த நிலையில், இப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x