Published : 17 Feb 2024 04:29 PM
Last Updated : 17 Feb 2024 04:29 PM
சிவகங்கை: தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 7 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், மாற்றுத் திறனாளிகள், முதியோர் சிரமமடைந்து வருகின்றனர்.
வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை,முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1,500 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.1,200 ஆகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், அந்த மாதத்திலிருந்து இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகையே வழங்கப்படவில்லை. மேலும், புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை வழங்காததால் அவர்களும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், எங்களுக்கு வாழ்வாதாரமே உதவித்தொகைதான். அதையும் 7 மாதங்களாக நிறுத்திவிட்டதால் சிரமப்படுகிறோம். புதிதாக விண்ணப்பித்து ஆணை பெற்ற 1 லட்சம் பேரும் உதவித்தொகைக்காக காத்திருக்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், உதவித்தொகை வழங்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT