Published : 17 Feb 2024 02:39 PM
Last Updated : 17 Feb 2024 02:39 PM
கோவை: திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதிமுக சார்பில், கோவை மண்டல தேர்தல் நிதி அளிப்பு நிகழ்ச்சி, வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள அக்கட்சியின் கோவை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்று நிதியை பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பத்திரங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது பாஜக அரசுக்கு, ஜனநாயகத்துக்கு எதிரான அவர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி. பாஜக அரசு, ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக நியாயமாக நடக்காமல், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
2024 மக்களவை தேர்தலில் பிரதமராக மோடி மீண்டும் வந்து விடக்கூடாது, மதவாத சக்திகளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகிறோம். பாஜகவை அதிமுக எதிர்க்கின்றனர் என்பதை மக்கள் நம்ப வேண்டும்.
அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கிறோம். தேர்தலுக்காகவோ, சில சீட்டுகளுக்காகவோ மதிமுக - திமுக கூட்டணி அமையவில்லை. திராவிட இயக்கங்களை வலுப்பெற செய்வதற்கும், மதவாத சக்திகளை வேரோடு தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி.
பாஜகவை எதிர்ப்பவர்களுக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுப்பது, ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்வது, வழக்குகள் போடுவது ஆகியவற்றை 9 வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். இதையும் மீறி 2024-ம் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான சூழல் உருவாகும். கடந்த முறை நாங்கள் ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவையில் போட்டியிட்டோம். தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம்.
நாட்டின் பாதுகாப்புக்கு மோடி அரசு தேவை என அண்ணாமலை கூறுகிறார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வேன் எனக்கூறிய பிரதமர், 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார்.
தற்போது மீண்டும் விவசாயிகள் போராடி வருகின்றனர். பறக்கும் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை விவசாயிகள் மீது வீசுகின்றனர். மத அரசியலை வைத்து, வாக்குவங்கியை நிரப்பி ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைக்கின்றனர். கட்சி தலைமையும், கூட்டணி தலைமையும் முடிவெடுத்தால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT