Published : 16 Feb 2024 02:45 PM
Last Updated : 16 Feb 2024 02:45 PM
சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளன; முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் நிநி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது.
அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேககேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே 1924-ம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானவை.
மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வதுதான். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகேதாட்டு அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கருநாடகத்தை எச்சரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment