Published : 16 Feb 2024 09:33 AM
Last Updated : 16 Feb 2024 09:33 AM

கிடப்பில் பேருந்து சேவை கோரிக்கை: நாகாவதி - எர்ரப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

தருமபுரி மாவட்டம் நாகாவதி எர்ரப்பட்டி கிராமத்தில் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பேனர் வைத்துள்ள கிராம மக்கள்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகாவதி - எர்ரப்பட்டி கிராம மக்கள் பேருந்து சேவை தொடர்பான தங்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நாகாவதி - எர்ரப்பட்டி கிராமம். 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தின் வழியாக தருமபுரி நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பேருந்துகள் அனைத்தும் நல்லம்பள்ளி ஒன்றியம் வழியாக தருமபுரி செல்கின்றன.

எர்ரப்பட்டி கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரத்துக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. இந்த கோரிக்கையை சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், இதை கண்டித்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக எர்ரப்பட்டி கிராம மக்கள் பேனர் வைத்து அறிவித்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியது: நாகாவதி எர்ரப்பட்டி கிராமம் பென்னாகரம் ஒன்றியம் மற்றும் வட்டத்துக்கு உட்பட்டது. எனவே, வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்த பணிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், வேளாண் துறை அலுவலகங்கள், டிஎஸ்பி அலுவலகம் ஆகிய இடங்களில் ஏதேனும் தேவைகள் தொடர்பாக பென்னாகரத்துக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால், எங்கள் ஊரில் இருந்து பென்னாகரத்துக்கு இதுவரை நேரடி பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, இவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மூலம் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி வரை சென்று பின்னர் அங்கிருந்து 30 கிலோ மீட்டர் பயணித்து பென்னாகரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் நேரமும், பணமும் விரயமாகிறது. எனவேதான், எர்ரப்பட்டியில் இருந்து பென்னாகரத்துக்கு நேரடியாக பேருந்து சேவையை ஏற்படுத்த கோருகிறோம். எங்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

எனவே, இதை கண்டித்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். பென்னாகரத்துக்கு நேரடி பேருந்து சேவை அல்லது எங்கள் பகுதியை நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இணைத்தல் இவற்றில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் இம்முறை தேர்தலில் எங்கள் பகுதி மக்கள் வாக்களிக்க மாட்டோம். இவ்வாறு கூறினர்.

சுவடே இல்லாத தார் சாலை: தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சியில் மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தப் பகுதி முழுவதும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமங்கள். இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 8 கிலோ மீட்டர் நீள சாலை முழுமையாக பெயர்ந்து தார்சாலைக்கான சுவடே இல்லாமல் சேதமடைந்துள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளும் வெளியூர்களுக்கு சென்றுவர கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாலை மிகவும் பாதிக்கப்பட்டதால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து மாணவ, மாணவியருக்காக காலை மற்றும் மாலையில் தலா ஒரு நடை மட்டுமே இயக்கப் படுகிறது. சாலையின் நிலையை காரணம் காட்டி அவரச சூழலிலும் கூட இந்த கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் இயக்கவும் மறுக்கப்படுகிறது.

இது குறித்து மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் புதியதாக தார் சாலை அமைக்கப்படவில்லை. எனவே, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தேர்தல்களை புறக்கணிப்பதாக ஊர் நுழைவு வாயிலில் கிராம மக்கள் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். சாலை மிகவும் பாதிக்கப்பட்டதால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து மாணவ, மாணவியருக்காக காலை மற்றும் மாலையில் தலா ஒரு நடை மட்டுமே இயக்கப் படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x