Published : 16 Feb 2024 06:40 AM
Last Updated : 16 Feb 2024 06:40 AM

‘மத்திய அரசிடம் நிதி பெற இணைந்து குரல் கொடுங்கள்’ - பேரவையில் பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசிடம் நிதி பெறஎங்களுடன் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தொடர்பானஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:

மோனோ ரயிலுக்கு ஆதரவாக கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதை செயல்படுத்த ஆட்சியில் இருந்த வரை நீங்கள் முனைப்பு காட்டவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கி, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

நான் முதல்வர் ஆனது முதல் பிரதமரை சந்தித்த போதெல்லாம், மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறேன். 6 நாட்களுக்கு முன்புகூட பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கான மத்திய அரசின் நிதியை இதுவரை தராததால், மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனில் இருந்தும் மட்டுமே முழு தொகையும் செலவிடப்பட்டுள்ளது.

இதுவரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் இப்போதாவது பேசுவது ஆறுதல் தருகிறது. மத்திய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து அவர் குரல் கொடுக்க வேண்டும்.

முக்கிய கோரிக்கைகள்: அதேபோல, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா, நிதி ஒதுக்கப்பட்டதா என்ற விவரங்களை அவர் கேட்டுள்ளார். தங்கள் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கியகோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்புமாறு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடந்த 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் எழுதினேன்.

ரூ.11,132 கோடி: அதன் அடிப்படையில் பெறப்பட்ட பணிகள், எனது தலைமையில் கடந்த 2023 அக்டோபர் 7-ம்தேதி நடந்த உயர்நிலை குழுகூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதிவழங்கப்பட்டது. அதில் 582 பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, அதில், 63 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடந்து வருகின்றன. மற்ற பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் தனது தொகுதி தொடர்பாக அளித்ததில்,நடப்பு ஆண்டில் 5 கோரிக்கைகள் எடுக்கப்பட்டு, அதில் 3 கோரிக்கைக்கு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஒருபணி முடிக்கப்பட்டு, 2 பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய 2 பணிகளுக்கு அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x