Published : 05 Feb 2018 07:46 AM
Last Updated : 05 Feb 2018 07:46 AM
நாடுமுழுவதும் புதுப்பிக்கப் படாமல் இருக்கும் 10 ஆயிரம் கி.மீ. தூரம் பழைய தண்டவாளங்களால் ஏற்படும் ரயில் விபத்துகளால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, 2018-19 மத்திய பட்ஜெட்டில் 3,900 கி.மீ. பழைய தண்டவாளங்களை சீரமைக்கவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ரயில்வே துறையினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் இயக்கப்படும் 12 ஆயிரம் பயணிகள் ரயில்களில், சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ரயில்வே துறையை மேம்படுத்தி, பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பயணிகள் அச்சம்
ஆனால், பழைய ரயில் தண்டவாளங்களை புதுப்பிப்பதில் தீவிரம் காட்டாததால், ரயில்கள் தடம் புரள்வதும் அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது ரயில் பயணிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ரயில் விபத்து கள் குறித்தும், அதை சீரமைக்கும் வழி தொடர்பாகவும் சமீபத்தில் அறிக்கை ஒன்றை ரயில்வே அமைச்சகத்துக்கு ரயில்வே பாதுகாப்பு கமிட்டி வழங்கியுள்ளது. அதில், 2006 முதல் 2016-ம் ஆண்டு வரை ரயில்கள் தடம்புரண்டதில் மட்டுமே 427 பேர் இறந்துள்ளனர். மேலும், 1,835 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக டிஆர்டியு உதவித் தலைவர் இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ரயில் போக்குவரத்தில் ரயில்பாதை பராமரித்தல் என்பது முக்கியமான பணியாகும். ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக 4,500 கி.மீ. தூரம் ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் அளவுக்கு, பழைய பாதைகளை முழுமையாக சீரமைப்பதில்லை. 2,000 முதல் 2,500 கி.மீ. தூரம் வரை மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.
விசாரணை ஆணையம்
நாடுமுழுவதும் தற்போதுள்ள நிலவரப்படி, 10,000 கி.மீ. தூரம் பழைய ரயில் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. ரயில்கள் தடம் புரள்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேபோல், ரயில் விபத்துகள் ஏற்பட்ட பிறகு விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது.
ஆனால், விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இதனால், உண்மையான காரணம் ரயில்வே கடைநிலை அலுவலர்களுக்கும், மக்களுக்கும் தெரிவதில்லை. எனவே, ஆணையத்தின் அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
21 சதவீதம் அதிகம்
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. 2016-ம் ஆண்டில் 37,165 மணி நேரமாக, இருந்த தண்டவாள பராமரிப்புப் பணி நேரம், 2017-ல் 45,033 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகமாகும். இதனால், ரயில்கள் தடம் புரள்வது கணிசமாக குறைந்துள்ளது.
அதாவது, 2016-ம் ஆண்டு 67 இடங்களில் ரயில்கள் தடம் புரண்டன. 2017-ல் 37 இடங்களில் ரயில்கள் தடம் புரண்டுள்ளன. 2018-19ல் 3,900 கி.மீ. தூரம் பழைய தண்டவாளங்களை சீரமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்கும் பணியைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT