Published : 15 Feb 2024 08:09 PM
Last Updated : 15 Feb 2024 08:09 PM
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (53) இன்று (பிப்.15) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT