Published : 15 Feb 2024 05:11 PM
Last Updated : 15 Feb 2024 05:11 PM

“சிஸ்டம் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும்!” - முதல்வர் ஸ்டாலின் @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு

சென்னை: தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், "இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது தனது எக்ஸ் தள பதிவில், "தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் முறை உள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன” என்று தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x