Published : 15 Feb 2024 04:23 PM
Last Updated : 15 Feb 2024 04:23 PM

“இன்று நாங்களும் பாஜகவை எதிர்க்கிறோம் என முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டார்” - இபிஎஸ்

சென்னை: பாஜகவுக்கு எதிராக பேசிவருவதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, "பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார்" என்று சட்டப்பேரவை முடிந்த பின் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி மேலும் பேசுகையில், "ஆளுநர் உரை மீது அதிமுக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வரின் பதிலுரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆளுநர் உரை மீது நேற்று நான் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான் முதல்வராக இருக்கும் அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பானது.

ஆனால், 42 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனது ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பல பிரச்சினைகள் நடந்தன. பிரச்சினைகள் ஏற்படும்போது சரி, திட்டங்கள் அறிவிக்கப்படும்போது சரி அதெற்கென குழு அமைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளன.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் எந்தக் குழுக்கள் முழுமையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அறிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றோம். அதற்கும் முதல்வரின் பதிலுரையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை. இப்படி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, நிக்ஜாம் புயல், நான் முதல்வன் திட்டம், தென் மாவட்ட கனமழை என எது குறித்து கேட்டாலும் பதிலுரையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை

கர்நாடகாவில் இருந்து காவிரியில் முறையாக தண்ணீர் பெறாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் உயர்வு தொடர்பாக கேட்டதற்கு பதில் இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் வெளியிட்டது. இவற்றில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கு சென்றாலும் 95% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் பேசிவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இனியாவது உதயநிதி ஸ்டாலின் இதை கண்டுபிடிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். படிக்காதவர்களையும், படித்தவர்களையும் ஏமாற்றுகிற அரசு திமுக அரசுதான்.

சட்டமன்றத்தில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புவதில்லை. சென்னையில் மாற்றுத்திறனாளிகள் கைது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன். ஆனால், அமைச்சர் எழுந்து இதற்கு பதில் சொல்வதற்கு பதில் ஏதேதோ சொல்லி கைவிட்டுவிட்டார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தபிறகு என்ன திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் மக்களை கடனாளியாக்கிவிட்டது என்று திமுக குற்றம் சாட்டியது. அதுவே திமுக ஆட்சி அமைந்த இந்த 33 மாதங்களில் ரூ.2,47,000 கோடி வாங்கியிருக்கிறார்கள். எனினும் எந்த புதிய திட்டமும் கொண்டுவரவில்லை. மக்கள் எந்த பயனும் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கினார்கள்.

அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகளாக தீர்க்க முடியாத காவிரி நதி நீர் பிரச்சினையை சட்ட போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றோம். தீர்ப்பு பெற்றாலும் நடைமுறைப்படுத்த காலதாமதம் ஆனது. அப்போது கூட்டணியில் அதிமுக இருந்தாலும் எங்களது எம்பிக்கள் 37 பேர் மூலம் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து வரலாறு படைத்தது. இதுமாதிரி ஏதேனும் ஒன்றாவது திமுக செய்ததா?

மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லைதானே. அப்படியானால் கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால்தான் நிதி வாங்க முடியும். உங்களுக்குதான் 39 எம்பிக்கள் உள்ளனர். எங்களிடம் இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஓடிவிட்டார். காவிரி விவகாரத்தில் திமுக ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்று தெரியவில்லை.

இண்டியா கூட்டணியில் வேறு இருக்கிறீர்கள். கூட்டணி கட்சிகள் சேர்ந்து மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதிக்கு எத்தனை முறை திமுக குரல் கொடுத்தது என்று சொல்ல முடியுமா" என்றார் இபிஎஸ்.

தொடர்ந்து உங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், "யாருக்கு இந்த அரசை கொடுத்தார்கள். உங்களுக்கு (திமுகவுக்கு) தான் அரசை கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தான் செய்ய வேண்டும்" என்றார்.

பாஜகவுக்கு எதிராக பேசத் தொடங்கியதுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, "பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார். அதிமுக பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதமாக இருந்தால் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்" என்று தெரிவித்தார்.

அதேபோல் தேர்தல் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியவர், "இங்கிருக்கும் திமுக கூடதான் நன்கொடை வாங்கியுள்ளது. வாங்காத ஒரே கட்சி அதிமுகதான். நன்கொடை வாங்கியவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்த திட்டங்களுக்கு இதுபோன்று தடை விதித்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். அதிமுக இந்த தீர்ப்பை வரவேற்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x