Published : 18 Feb 2018 03:01 AM
Last Updated : 18 Feb 2018 03:01 AM
செ
ஞ்சி அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்ற விவசாய கூலித் தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பு, எதேச்சையாக பழங்கால நாணயம் ஒன்றை கண்டெடுத்தவர், பிறகு நாணயங்கள், பழங்காலப் பொருட்கள் சேகரிப்பதையே தன் பொழுதுபோக்கு ஆக்கிக் கொண்டுள்ளார். செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் கால நாணயங்கள் உட்பட தங்கம், வெள்ளி, செம்பு என 660 நாணயங்களை சேகரித்து வைத்திருக்கிறார். இதுபற்றி அவரே கூறுகிறார்..
தினமும் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று, செஞ்சிக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள சர்க்கரை குளத்தில் குளிப்பேன். 8 வருஷத்துக்கு முன்ன ஒருநாள்.. குளிச்சுட்டு திரும்பும்போது, குத்தரசி மலை அருகே 25 பைசா போல ஏதோ ஒன்று காலை தட்டுப்பட்டது. கழுவிப் பார்த்தபோது, நாணயம் போல தெரிந்தது. செஞ்சிக்கோட்டையில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் உருவம் அதிலும் பதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்புறத்தில், ‘33/03’ என்பதுபோல எழுதப்பட்டிருந்தது. விவரம் அறிந்தவர்களிடம் அதை காட்டியபோது, ‘செஞ்சியை ஆண்ட விஜயநகர நாயக்க மன்னர்கள் கால நாணயம் போலத் தெரிகிறது. ‘33/03’ என்பது எண்களா, ஏதேனும் மொழி எழுத்துகளா என்பது தெரியவில்லை’ என்றார்கள்.
இத்துனூண்டு காசுக்குப் பின்னால, இவ்ளோ கதையான்னு வியப்பா இருந்திச்சு. அப்புறம், அதுபோன்ற நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. கிபி 1800-ம் ஆண்டு நாணயங்கள், முகலாய பேரரசர் அவுரங்கசீப் கால நாணயங்கள் உட்பட இரும்பு, செம்பு, தங்கம்னு 660 நாணயங்கள் சேகரித்திருக்கேன். மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய விளக்குகள், கணையாழிகள், ஆங்கிலேயர் கால வெடிக் காத தோட்டா, புகை இழுக்கும் ஹூக்கா, பாலாடை என ஏராளமான பழங்கால பொருட்கள் சிக்கின. அவற்றையும் பாதுகாத்து வைத்திருக்கேன்’’ என்று கூறும் குமார், செஞ்சி அருகே ஊரணிதாங்கல் மலைக் குன்றில் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்.
இவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் பல முக்கியமான, சுவாரசியமான தகவல்கள் தெரியக்கூடும் என்கிறார். தன்னிடம் இருக்கும் பழங்காலப் பொருட்களை தொல்லியல் துறையிடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT