Published : 14 Feb 2024 08:48 PM
Last Updated : 14 Feb 2024 08:48 PM

புகார் அளிக்க வருவோரின் மனமாற்றத்துக்காக காவல் நிலையத்தில் நூலகம் திறப்பு @ தஞ்சை

தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் செயல்படும் நூலகத்துக்கு எஸ்பி ஆசீஸ்ராவத் புத்தகம் வழங்கினார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வருபவர்களின் மனமாற்றத்துக்காக அண்மையில் அறிவகம் எனும் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் இந்தக் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வருபவர்களின் மனமாற்றத்துக்காகவும், பல்வேறு பிரச்சினைக்களுக்காக இங்கு வரும் மாணவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், காவல் ஆய்வாளர் ரமேஷ், அறிவகம் என்னும் நூலகத்தை, காவல் நிலையத்துக்குள் அமைக்க முடிவு செய்தார்.

அதன்படி காவல் நிலையத்துக்குள் 3 பீரோக்கள் முழுவதும் பல்வேறு வகையான நூல்களை வைத்து அறிவகம் எனும் நூலகத்தைக் கடந்த மாதம் ஜன.26-ம் தேதி திறந்தார்.இந்த நூலகத்தைப் பற்றித் தகவலறிந்த, தஞ்சாவூர் எஸ்பி ஆசீஸ்ராவத், அந்த காவல் நிலையத்துக்கு வந்து, காவல் ஆய்வாளர் ரமேஷை, பாராட்டி வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இது தொடர்பாகக் காவல் ஆய்வாளர் ரமேஷ் கூறியது: “காவல் நிலையத்துக்கு பல்வேறு பிரச்சினைகளுக்காக வரும் புகார்தாரர்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்களிடம் அமைதியாகப் பேசி. சிறிது நேரம் அமர வைத்தால், அந்த நேரத்தில் அவர்கள் அந்த அறிவகம் என்னும் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களது மனநிலை மாறி, சகஜ நிலைக்கு திரும்புவார்கள்.

சிறிய பிரச்சினைக்காக, காவல் நிலையத்துக்கு வருவதால், அவர்களுக்குள் ஏற்படும் மனஉளைச்சலைப் போக்கவே , இந்த அறிவகத்தை அமைத்துள்ளோம். மேலும், நூலகம் எனப் பெயர் வைத்தால் சராசரியாக பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள். அதனால் அறிவுப்பூர்வமாகப் பெயர் இருந்தால், இங்கு வருபவர்கள் அதில் உள்ள புத்தகங்களை வாசிப்பார்கள் என்ற காரணத்தால் இந்தப் பெயரை வைத்துள்ளேன்.

இந்த அறிவகத்தில், சமூக ஆர்வலர்கள், இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்பவர்கள் வழங்கிய புத்தகங்கள் மற்றும் இங்கு புகாரளிக்க வந்து சுமூகமான நிலைக்குத் திரும்பியவர்கள் வழங்கிய புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், புராணக்கதைகள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் உள்பட சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன.தற்போது போட்டித் தேர்வாளர்கள், இங்கு படித்து வருகின்றனர். இந்தப் புத்தகங்களை, காவல் நிலையத்தில் டோக்கன் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு கொண்டுச் சென்று படித்து விட்டு, மீண்டும் இங்கு வந்து வழங்கலாம்.

காவல் நிலையத்துக்கு வருபவர்கள், புகாரளிப்பதோடு, அவர்களுக்கான மன நிலையை மாற்றும் விதமாக செயல்படும் இந்த அறிவகத்தில் தினந்தோறும் சிலர் படித்து வரும் நிலையில், திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருவது மகிழச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x