Published : 14 Feb 2024 03:50 PM
Last Updated : 14 Feb 2024 03:50 PM

கோயில் நகை உருக்கும் திட்டம்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: கோயில் நகை உருக்கும் திட்டம் பற்றி முழுமையான வெள்ளை அறிக்கையையும், கோயில் முறைகேடுகள் மற்றும் விக்கிரக கடத்தல் வழக்குகள் பற்றிய முழு அறிக்கையையும் நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்த வகையில் வருடத்துக்கு ரூ.6 கோடி வருமானம் வருவதாகவும் இந்த திட்டம் முழுமை பெறும்போது ரூ.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் இதுவரை வெளியில் தெரியாமல் மறைவாக செயல்படுத்தப்பட்டது என்பதே அதிர்ச்சியான விஷயம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஆட்சியாளர்கள் பார்வை கோயில் சொத்தின் மீது அழுத்தமாக பதிந்தது. நகை உருக்கும் திட்டம் குறித்து தெரியவந்ததும் இந்து முன்னணி சார்பில் சில சந்தேகங்களை கேள்வியாக எழுப்பி இருந்தோம்.

ஆனால் அதற்கான எந்த பதிலையும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அளிக்கவில்லை. இது மேலும் பல சந்தேகங்களை பக்தர்களிடம் எழுப்பி வருகிறது. அதில் சிலவற்றை ஊடகங்கள் மூலம் மீண்டும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நகைகள் 24 காரட் சுத்தமான தங்கமாக இருக்காது. எனவே, அதனை உருக்கும் போது கிடைத்த தாமிர உலோகத்தை என்ன செய்தார்கள்? தங்கநகையில் இருந்த நவரத்தினங்கள் வைரம் போன்றவற்றை டெபாசிட் செய்தார்களா? அது என்ன வகையில் கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது? உருக்குவதற்கு முன் தங்கத்தின் அளவு, உருக்கிய பின்னர் கிடைத்த தங்கத்தின் அளவு ஆகிய தகவல்களை பகிரங்கமாக ஏன் வெளியிடவில்லை?

அமைச்சர் தரும் தகவல்கள் பொத்தாம் பொதுவாக இருக்கிறது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். தெளிவான முழு தகவல் இல்லாத காரணத்தால் இதன் பின்புலம் பற்றி ஆராய வேண்டியுள்ளது என்றே கருத இடமிருக்கிறது. தங்கத்தை இருப்பு வைத்துள்ள முழுவிவரம், அதற்கான வட்டி விகிதம், கிடைக்கும் வருவாய் எங்கு எதற்கு செலவிடப்படுகிறது? ஆகியன பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. மேற்கண்ட சந்தேகங்களை தெளிவுபடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரைக் கேட்டு கொள்கிறோம்.

முகலாய கொள்ளையர்களும், கிறித்துவ ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களும் கோயிலை சூறையாடினர். ஆனாலும் இந்துக்கள் தங்கள் எதிரிகளை இனம் கண்டு கொண்டு விழிப்புடன் இருந்ததால் இந்துக்களின் கோயில்களைக் காக்கவும் அதன் அசையா மற்றும் அசையும் சொத்துகளை பாதுகாக்கவும் பல தியாகங்களை செய்தனர் என்பது வரலாறு. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளில் கோயில் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல பக்தர்கள் போல பகல்வேடமிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அதன் அதிகாரிகளால், அரசியல்வாதிகளால் கோயில் சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. கோயில் விக்ரகங்கள் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. பல கோடி மதிப்பிலான மரகத லிங்கங்கள் போன்றவற்றை காணவில்லை. போலியான விக்ரகங்கள் பலகோடி மதிப்பிலான சுவாமி திருமேனிக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான கோயில்களை காணவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் பட்டா மாற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோல் எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஊழல் முறைகேட்டுத் துறையாக விளங்குகிறது என பலவகையிலும் குற்றச்சாட்டு இந்து சமய அறநிலையத்துறை மீது எழுந்துள்ளது.

சுவாமி திருமேனி, நகைகள், உற்சவர் திருமேனிகள் கடத்தல் குறித்து நடைபெற்ற வழக்குகள் விசாரணைகள் ஆகியன என்னவாயிற்று? நீதிமன்றத்தில் காலதாமதபடுத்துவதால் நீதியை மறைக்க இந்த அரசு முயலலாம். ஆனால் இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையான இறைவன் நின்று கொல்வான் என்பதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம். எனவே கோயில் நகை உருக்கும் திட்டம் பற்றி முழுமையான வெள்ளை அறிக்கையையும், கோயில் முறைகேடுகள் மற்றும் விக்கிரக கடத்தல் வழக்குகள் பற்றிய முழு அறிக்கையையும் நடக்கின்ற சட்டசபையில் சமர்ப்பிக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x