Published : 14 Feb 2024 01:38 PM
Last Updated : 14 Feb 2024 01:38 PM
புதுடெல்லி: "தமிழகத்தில் கூட்டணி இல்லை என்பதற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கிடையாது. கூட்டணி அமைக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன." என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய அமைச்சரும் ஆனார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளதையடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனது டெல்லி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணிபுரிவதற்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். இன்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வேன். தமிழகத்தில் கூட்டணி இல்லை என்பதற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கிடையாது. கூட்டணி அமைக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. கட்சி எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். நாளைக்கே தமிழகத்தில் போட்டியிட கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன்." என்றார்.
அப்போது, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எல்.முருகன், "இது என்னுடைய முடிவு அல்ல. பாஜக தேசிய தலைமை எடுத்த முடிவு. எங்களுக்கு எந்த பயமும் கிடையாது.
ஆ.ராசா, திமுகவை தமிழகத்தில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்பதே எங்களின் முதல் பொறுப்பு, கடமை எல்லாம். அதற்கான பணியை தமிழக பாஜகவும், அண்ணாமலையும் செய்துகொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் திமுக தமிழகத்தில் இருந்து காணாமல் போகும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வென்று வருவார்கள்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT