Published : 14 Feb 2024 05:51 AM
Last Updated : 14 Feb 2024 05:51 AM
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் ஆயுள் தண்டனைகைதிகளாக இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை உடனிருந்து கவனிக்க வேண்டியிருப்பதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக்கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் உள்ளசாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தைஇலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணங்கள் ஏற்கெனவே மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதாகவும், அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் பிப். 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT