Published : 04 Feb 2018 10:08 AM
Last Updated : 04 Feb 2018 10:08 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 35 கடைகள் முழுவதும் எரிந்தன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின. கடைகளில் தீப்பிடித்தது எப்படி என்று போலீஸாரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தை அறிந்து கோயில் முன்பு திரண்ட பெண் பக்தர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மதுரையில் உள்ள மீனாட்சி, சுந்தரேசுவரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். சித்திரை திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்களின்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவர்.
கோயிலுக்கு நான்கு திசைகளிலும் கோபுரங்கள் உள்ளன. அவ்வழியே கோயிலுக்குள் செல்வதற்கு நுழைவு வாயில்கள் இருந்தாலும், ராஜகோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்குச் செல்லும் வாயில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த வாயிலைத்தான் பெரும்பாலான பக்தர்கள் பயன்படுத்துவர்.
கிழக்கு கோபுரம் பகுதியில் கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் ‘பத்துக்குப் பத்து’ என்ற அளவில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கோயில் பாதுகாப்பு கருதி இக்கடைகளை அகற்ற வேண்டும் என பல அமைப்புகள் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் புகார்களும் கொடுத்துள்ளன. இருப்பினும் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக கடைகளை அகற்ற முடியாத சூழல் தொடர்கிறது.
கரும்புகையால் சந்தேகம்
இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு 10 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்படுவதற்கு முன்பு எல்லா கடைகளும் அடைக்கப்பட்டன. பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து இரவு 10.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் புகை அதிகரித்தது. கோயிலுக்கு வெளியே சித்திரை வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பிறகே ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள கடைகள் தீப்பற்றி எரிவது தெரிந்தது. இதையடுத்து, திடீர் நகர் தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் வந்த வீரர்கள், கிழக்கு சித்திரை வீதியில் வாகனத்தை நிறுத்தி தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. பிளாஸ்டிக் பொருட்கள், நெய், சாக்குப் பைகள், மரப் பொருட்கள் என எளிதில் தீப்பற்றும் பொருட்கள் குவியல், குவியலாக கடைகளில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. கண்ணாடி பொருட்கள் வெடித்துச் சிதறின.
நிலைமை மோசமானதால் தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட இடங்களில் இருந்து மே லும் 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் பத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
விடிய விடிய தீயணைப்பு பணி
அனைத்து லாரிகளும் கிழக்கு கோபுரம் அருகே உள்ள சித்திரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணை யர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியை வேகப்படுத் தினர்.
இதற்கிடையே, கீழ சித்திரை வீதியில் திரண்ட பொதுமக்கள், பக்தர்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தாங்களும் கோயிலுக்குள் சென்று தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு இந்து அமைப்பினர் திரண்டு, கோயில் நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். முறையான பாதுகாப்பு இல்லாததே தீ விபத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
அதிகாலை 1.30 மணி வரை சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தீயணைக்கும் பணி விடிய விடிய நடந்தது. இந்த விபத்தில், 35 கடைகள் முற்றிலும் எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின. சேதம் குறித்து நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்வதால் எந்த தகவலும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்தனர்.
வழக்கம்போல் நடை திறப்பு
இதற்கிடையே, கோயில் நடை நேற்று காலை வழக்கம்போல திறக்கப்பட்டது. கிழக்கு, வடக்கு கோபுர வாயில்கள் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அம்மன் சன்னதி, தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புக்காக கூடுதல் போலீ ஸார் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை ஆட்சியர் வீரராக ராவ், கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை மீண்டும் ஆய்வு செய்தனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல விபத்து மற்றும் கட்டிடங்களின் உறுதித் தன்மையை கண்டறிய 4 பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தீ விபத்து பற்றிய தகவல் பரவியதும் நேற்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மீனாட்சி அம்மன் கோயிலில் இப்படி யொரு சம்பவம் நடந்துவிட்டதே என சில பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். விபத்து குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடைகளில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து உடனடியாக எந்தத் தகவலும் தெரியவில்லை. கோயிலுக்குள் உள்ள கடைகளில் கூடுதல் வெளிச்சத்துக்காக எரிய விடப்படும் ஹாலோஜன் பல்புகள் அதிக சூடாகி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் விசாரணை முடிவில்தான் காரணம் தெரியவரும்.
(மேலும் செய்தி,
படங்கள் உள்ளே...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT