Published : 30 Apr 2014 11:11 AM
Last Updated : 30 Apr 2014 11:11 AM
மேட்டூர் அணையில் போதிய தண்ணீரும் இல்லை, மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு மின்சாரமும் இல்லாத நிலையில், கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி டெல்டா பகுதி களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங் களில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். மேட்டூர் அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 34.28 அடியாக உள்ளது. அணைக்கு 1,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,000 கன அடி தண்ணீர் அணையிலிருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட் டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் ஏறத்தாழ 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.
ஆனால், கடந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப் படவில்லை.
வடிமுனை குழாய் (போர்வெல்) வசதியுள்ள இடங்களில் மட்டும் விவசாயி கள் குறுவை சாகுபடியை மேற் கொண்டனர். மேட்டூர் அணையின் நீர்இருப்பு கவலையளிப்பதாக இருந்தாலும், மும்முனை மின்சாரமும் கிடைக்காதது விவசாயிகளை மேலும் சிக்கலில் ஆழ்த்தி யுள்ளது.
நல்ல மழை பெய்தால் மட்டுமே…
இந்நிலையில், காவிரி நீர்பிடிப் புப் பகுதிகளில் நல்ல மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து அதிகமாகி, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறை பொறியாளர்கள்.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: “கர்நாடகாவில் 4 அணைகளில் பிப்.1-ம் தேதி 47.58 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அங்கு கோடை பாசனத்துக்கு ஏறத்தாழ 20 டி.எம்.சி. நீர் பயன்பட்டுள்ளது. விதி முறைகளை மீறி கோடை பாசனத்துக்கு கர்நாடகம் நீரைப் பயன்படுத்துவதால் நமது தேவைக்கு ஆண்டுதோறும் நாம் அவர்களிடம் கையேந்தும் நிலையே தொடர்கிறது.
கர்நாடக அணைகள் வழிந்தால்தான்…
டெல்டா மாவட்டங்களுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற் போது 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
2001-02 ஆண்டுகளில் தமிழகத்தில் மின்சார மொத்த பயன்பாட்டில் 27.1 சதவீதமாக இருந்த விவசாயத்துக்கான பயன்பாடு 2010-ம் ஆண்டிலிருந்து 18 சதவீதமாக குறைந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு 17.2 லட்சமாக இருந்த மோட்டார் பம்ப்செட்டுகள் தற்போது 20.35 லட்சமாக உயர்ந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காவிரியிலும் தண்ணீர் இல்லை, மின்சாரமும் இல்லை என்றால் விவசாயம் மிகுந்த பின்னடைவை சந்திக்கும்” என்றார்.
12 மணி நேரம் மும்முனை மின்சாரம்…
கடந்த ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் வழங்கினால், ஓரளவுக்கு குறுவை சாகுபடியை மேற்கொள்ளலாம் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT