Published : 14 Feb 2024 06:15 AM
Last Updated : 14 Feb 2024 06:15 AM
சென்னை: நாட்டிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, இயக்க ஊர்திகள் துறை சார்பில் சென்னை,சேப்பாக்கத்தில் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு நடைபயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலைப் போக்குவரத்து நிறுவன ஓட்டுநர்கள், நேருயுவ கேந்தரா தன்னார்வ இளைஞர்கள், சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரிமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணியானது அரசு விருந்தினர் மாளிகை தொடங்கி, தீவுத்திடல் வரை நடைபெற்றது.
இதில் அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்று, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம், குடை ஆகியவற்றை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கி, சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்தியாவில் ஏற்படும் சாலைவிபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் 19 முதல் 32 வயதுக்குட்பட்டே இருக்கின்றனர்.
அதேநேரம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும் சாலை விபத்துக்கான மிகப்பெரிய காரணம் எனவும் ஆய்வில் தெரிகிறது. எனவே இதைத் தடுப்பது தொடர்பான கருத்துகளை முன்வைத்து பேரணி நடைபெற்றது.
முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் கடந்த 2 ஆண்டுகளாக விபத்துகள் சற்று குறைந்திருந்தாலும், முற்றிலும் இல்லாத நிலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பின்இருக்கையில் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனதொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பேரணியில், போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், சாலை பாதுகாப்பு காவல்துறை துணைத் தலைவர் எஸ்.மல்லிகா, போக்குவரத்து இணை ஆணையர் ஏ.ஏ.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT