Last Updated : 13 Feb, 2024 09:41 PM

2  

Published : 13 Feb 2024 09:41 PM
Last Updated : 13 Feb 2024 09:41 PM

எப்போது இறுதியாகும் ‘ஸ்லோ மோஷன்’ அதிமுக கூட்டணி பட்டியல்?! - ‘இழுபறி’ பின்புலம்

திமுகவில் கூட்டணி கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதிமுகவில் இன்னும் கூட்டணி கட்சிகள் பட்டியல் இன்னும் தயாராகாமல் இருக்கிறது. ஏன் இந்த இழுபறி?அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ... இப்படியாக, சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. ஆனால், பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த முடிவையும் எட்டப்படாமல் இருக்கிறது.

அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி கணக்கு என்ன? - தொடக்கத்தில் பாமக, தேமுதிக என இரு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளும் கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் இணைந்து பயணித்தனர். பாமக 7 தொகுதியிலும்., தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

ஆனால், இம்முறை அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா என்னும் பெரும் குழப்பத்தில் இருக்கிறது பாமக. சில தினங்களுக்கு முன்பு அன்புமணி நட்டாவைச் சந்தித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்தித்தார். எனவே, அதிமுக கூட்டணிதான் இறுதி செய்யப்படும் என சொல்லப்படுகிறது. பாமக நிர்வாகிகளும் அதைத்தான் எதிர்ப்பார்க்கின்றனர். சென்ற முறை போல் 7+ தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பாமக கேட்கும். இதை உறுதி செய்வதிலும் அதிமுகவுக்குப் பெரும் சிக்கல் இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. 6 தொகுதிகளை நிச்சயம் அதிமுக ஒதுக்க வாய்ப்பிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தேமுதிக செயற்குழு கூட்டத்துக்குப் பின் பேசிய பிரமலதா விஜயகாந்த் ‘14 தொகுதி, ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்குபவர்களுடன் கூட்டணி’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பாஜக கூட்டணியில் தேமுதிக கேட்கும் இடங்களை ஒதுக்குவதில் தயக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தேமுதிக கேட்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுமா என்பதும் கேள்விதான். எனவே, இரண்டு தொகுதிகளை, கூடுதலாக ஒரு மாநிலங்களவை சீட்டை தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாமக, தேமுதிக என இரு கட்சிகளும் ராஜ்ய சபா சீட்’டை ஒதுக்க கோரிக்கை வைப்பதால் அதிமுக என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை. இப்போது வரை அதிமுகவில் சிறிய கட்சிகள் இணைந்தது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக இணைந்தால் அதிமுக ‘மெகா கூட்டணி’ அமைப்பது உறுதியாகிவிடும். இதனால், திமுகவுக்கு கடும் போட்டி ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x