Published : 13 Feb 2024 04:56 PM
Last Updated : 13 Feb 2024 04:56 PM
சென்னை: மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொது மக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசால் 2003-ஆம் ஆண்டு மின்சார சட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களாக செயல்படும் மாநில மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் நோக்கோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவுகளை அமல்படுத்துவதை பொறுத்தே மத்திய அரசின் நீண்ட கால கடன் மற்றும் வட்டியில்லா கடன் மாநில அரசுகளுக்கு வழங்குவதை முன்நிபந்தனையாக்கியது.
இப்பின்னணியில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் என்ற கம்பெனியாக மாற்றி அதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) என்ற இரு கம்பெனிகளை புதிதாக உருவாக்கியது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை இவ்வாறு 3 கம்பெனிகளாக பிரிவினை செய்தது மின் வாரியத்தை மேலும் பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கு போதுமான கவனம் செலுத்தாத நிலையிலும், மின்சாரத்தை அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாலும் மின்சார வாரியத்திற்கான கடன் தொகை அதிகரித்துவிட்டது. தற்போது, மின்சார வாரியத்திற்கு ரூபாய் 1.67 லட்சம் கோடி வரை கடன் உள்ளதாக தெரிகிறது.
ஒன்றிய அரசு மின்சார வாரியத்தை மேலும் மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்படுத்த வலியுறுத்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
இந்நிலையில், கடன் தொகையை சரிசெய்வது என்ற பெயரால் தற்போது தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மூன்று கம்பெனிகளாக அதாவது, உற்பத்தி (அனல்), பசுமை மின்சாரம், மின் விநியோகம் என்ற முறையில் பிரிவினை செய்து அரசாணை 6 மற்றும் 7-ஐ வெளியிட்டுள்ளது. TANGEDCO-வின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் இந்த மூன்று கம்பெனிகளின் கீழ் கொண்டு வர தீர்மானித்துள்ளது.
இவ்வாறு பிரிவினை செய்யப்பட்டால் மின்சாரத் துறை மென்மேலும் தனியார்மயமாவதற்கும் தனியார் நிறுவனங்கள் மிகுந்த ஆதாயம் அடைவதற்கும் வழிவகுக்கும். இதோடு, மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொது மக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
மேலும், இந்நடவடிக்கை தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நலன்களை பாதிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும். எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து இந்த அரசாணைகளை திரும்ப பெறுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT