Published : 13 Feb 2024 12:16 PM
Last Updated : 13 Feb 2024 12:16 PM
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்பும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்ததற்குப் பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின்னணி என்ன?
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமைச் செயலக அலுவலகத்தில் நீண்ட நேரம் சோதனை நடத்தியது. தமிழகத்தில், ஒரு அமைச்சரின் சேம்பரில் சோதனை நடத்தியது அதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடதக்கது.
பின், அடுத்தநாள் அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகுப் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டது தொடங்கி இந்த 8 மாதங்களில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மூன்று முறை ஜாமீனுக்காக வழக்கு தொடுத்தார். ஆனால், மூன்று முறையும் அந்த வழக்கை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. மேலும், அமலாக்கத்துறையின் வாதத்தின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்வதற்கு 19-வது முறையாகக் காவல் நீட்டிப்பும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்தனர். செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.
அமைச்சர் பதவிக்கு எழுந்த எதிர்ப்பு! அவர் கைது செய்யப்பட்ட நிலையிலும், 243 நாட்களும் இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்ந்தார். கடந்த ஜனவரி.30-ம் தேதி, இவரின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடைநிலை ஊழியர் ஒருவர் குற்றவழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது” எனப் பேசினார்.
இந்த வழக்கு பிப்ரவரி 14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், அவர் அமைச்சராக தொடர்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் நீடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.
ஆளுநர் ரவி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் தமிழக அரசு அவரை நீக்கவில்லை. இதனால், தமிழக அரசு மீது பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர். தற்போது தன்னுடைய ராஜினாமா கடிதத்தைத் தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தார். இது ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன? - மாண்புமிகு தமிழக முதலமைச்சர், சென்னை ஜார்ஜ் கோட்டை என தொடங்கும் அக்கடிதத்தில், ”மதிப்பிற்குரிய ஐயா, தங்கள் தலைமையின் கீழ் அமைச்சராக தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது சில தீய சக்திகள் பொய் வழக்குகளைப் புனைந்தனர். நான் அப்பாவி, உண்மை நிலைபெற சட்டப்பூர்வமாக தொடர்ந்து போராடுவேன். நமது நீதித்துறை மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது, விரைவில் எனக்கான நீதி வழங்கப்படும் என நம்புகிறேன்.
நீதிக்கான எனது போராட்டத்தில் தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து அபரிவிதமாக ஆதரவளிக்கும் முதலமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதை ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
செந்தில்பாலாஜி ராஜினாமா, பின்னணி என்ன? ‘அதிமுகவிலிருந்து திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தபோது அவர் முதலமைச்சருக்கு விசுவாசமாக இருப்பார்’ எனச் சொல்லப்பட்டது. அதேபோல், கொங்கு மண்டலத்தில் வலிமை குன்றியிருந்த திமுகவை பலப்படுத்துவார் எனவும் கருத்து கூறப்பட்டது. அதேபோல், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வலிமையை அதிகரிக்க பெரிய அளவில் முயற்சிகள் செய்து, அதை சாதித்தும் காட்டினார்.
எனவே, தற்போது ’மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில் செந்தில் பாலாஜி தேவை’ என திமுக தலைமை நினைக்கிறது.இதனால், அமைச்சர் பதவியைத் துறந்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் வெளியே கொண்டுவர காய்களை நகர்த்த திமுக திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நகர்வுகள்தான் இவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT