Published : 13 Feb 2024 10:40 AM
Last Updated : 13 Feb 2024 10:40 AM
திமுகவுடன் விசிக, ஐயுஎம்எல், கொமதேக கட்சிகள் பேச்சு: கூடுதல் தொகுதிகள் தர கோரிக்கை திமுக நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டுக்கான குழுவுடன் விசிக, கொமதேக, ஐயுஎம்எல் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விசிக 4 தொகுதிகளையும், ஐயுஎம்எல் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடத்தையும் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுக சார்பில் அதன் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்டமாக கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் உள்ளன.
இந்த சூழலில், நேற்று கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை அதே தொகுதியுடன், கூடுதல் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக வெளிப்படையாக நடைபெற்று முடிந்துள்ளது. மீண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம். வெகு சீக்கிரம் தொகுதி பங்கீடு முடிவாகும் என்றார்.
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட 5 பேர் குழு, திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஆலோசனை நடத்தினர். இக்கட்சி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதே தொகுதியை மீண்டும் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து, காதர் மொய்தீன் கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டுள்ளோம். இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் தரவேண்டும் என்று கேட்டுள்ளோம். முதல்வரிடம் பேசி முடிவெடுப்பதாக திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர் என்றார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவை சந்தித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் 3 தனித்தொகுதி,1 பொதுத்தோகுதி என விசிகவுக்கு 4 தொகுதிகள் கேட்டுள்ளோம் திமுகவுக்கான நெருக்கடிகளை அவர்கள் தெரிவித்தனர். நாங்களும் எங்கள் தேவை எந்த பின்னணியில் இருந்து வருகிறது என்பதை எடுத்து கூறினோம்.
அடுத்த பேச்சுவார்த்தையில் கூட்டணி, விசிக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுப்போம். தேர்தல் சின்னம் குறித்து எந்த பிரச்சினையும், கேள்வி எழாது என்று நம்புகிறோம். 25 ஆண்டுகளாக செயல்படும் விசிகவின் தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார்.
விசிகவை பொறுத்தவரை, ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் எம்.பி.யாக உள்ளனர். இம்முறை, விசிகவின் பானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சி தீவிரமாக உள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, காஞ்சிபுரம், சிதம்பரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 4 தனித்தொகுதிகள், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்ஆகிய பொதுத்தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து இதில் 3 தனி, 1 பொதுத்தொகுதியை ஒதுக்கித் தரும்படி திமுகவிடம் விசிக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT