Published : 13 Feb 2024 11:12 AM
Last Updated : 13 Feb 2024 11:12 AM

“ஆளுநர் உரையின்போது நடைபெற்ற சம்பவம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம்” - ஜி.கே.வாசன்

ஜி.கே. வாசன் எம்.பி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்துக்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான். நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையின் போது நடைபெற்ற சம்பவம், தமிழக அரசின் முறையற்ற செயல்பாட்டுக்கு உதாரணம்.

தமிழக மக்களுக்கான, தமிழ்நாட்டுக்கான தமிழக அரசின் ஆளுநர் உரையில் சரியான செய்திகள் இடம் பெற வேண்டும். ஆனால் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் தமிழக அரசு. குறிப்பாக தமிழக ஆளுநரை தமிழக அரசு பல சமயங்களில் அவரது எதிர்ப்புக்கு ஏற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டது தான்.

மேலும் தமிழக ஆளுநரின் பதவிக்கு உரிய மரியாதை, முறையான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு பாதகம் இருக்கக்கூடாது. நேற்றைய சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும் போது அதற்கு எவ்விதத்திலும் இடையூறு இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான விரும்பத்தகாத நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு தமிழர்களுக்கான, தமிழ்நாட்டுக்கான வளர்ச்சிக்கு திட்டங்கள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து முறையாக செயல்பட வேண்டும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x