Published : 13 Feb 2024 05:04 AM
Last Updated : 13 Feb 2024 05:04 AM

பேரவைத் தலைவர் அவதூறு கருத்துகள் தெரிவித்தார்: ஆளுநர் வெளியேறியது குறித்து ராஜ்பவன் விளக்கம்

சென்னை: ஆளுநர் உரையில் பல பத்திகளில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்ததால் அதை வாசிக்கவில்லை என்றும், பேரவைத்தலைவர் ஆளுநர் மீது அவதூறு பேசியதால் அவையில் இருந்து அவர் வெளியேறியதாகவும் ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கியது. அரசால் அளிக்கப்பட்ட உரையின் முதல் பகுதியில் சில கருத்துகளை மட்டும்தெரிவித்துவிட்டு, 4 நிமிடங்களில் உரையை முடித்து ஆளுநர் அமர்ந்தார். தொடர்ந்து, ஆளுநர் உரையின்தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் அப்பாவு வாசித்து முடித்ததுடன், ஆளுநர் உரையாற்றியது குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

அதன்பின், பேரவை விதிகளை தளர்த்தி, அரசு அளித்த உரை மட்டுமே பேரவை குறிப்பில் இடம்பெறும் வகையிலான தீர்மானத்தை பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் வாசித்தார். அப்போது, அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுகள் தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசிடம் இருந்து வரைவு ஆளுநர் உரை, கடந்த பிப்.9-ம் தேதிராஜ்பவனுக்கு கிடைத்தது. அந்த உரையில், அதிகப்படியான பத்திகளில் உண்மையை விட்டு வெகுவாக விலகிய, தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, சில அறிவுரைகளுடன் ஆளுநர் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

குறிப்பாக, தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை தரும் வகையில்,ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஏற்கெனவே தமிழக முதல்வர் மற்றும் பேரவைத்தலைவருக்கு ஆளுநர் கடிதங்கள் எழுதியிருந்தார்.

மேலும், ஆளுநர் உரை என்பதுஅரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். பேரவை கூட்டப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்கள்,பாகுபாடான அரசியல் கருத்துகளை தெரிவிப்பதற்கான மன்றமாகஇருக்கக்கூடாது என கூறியிருந்தார்.

அறிவுரைகள் புறக்கணிப்பு: ஆனால், தமிழக அரசு ஆளுநரின் அறிவுரைகளை புறக்கணித்துவிட்டது. இந்நிலையில், ஆளுநர் பிப்.12-ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு தனது உரையை நிகழ்த்தினார். முதலில், பேரவைத்தலைவர், முதல்வர், பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, திருவள்ளுவரின், 738-வது திருக்குறள் அடங்கியமுதல் பத்தியை வாசித்தார். அதைத்தொடர்ந்து, அரசியலமைப்பின் சிறப்புகளைக் கருத்தில்கொண்டு, உரையின் ஏராளமான பத்திகளில், தவறாக வழிநடத்தும் தகவல்கள், கூற்றுகள் இருப்பதால், உரையைமுழுமையாக தன்னால் படிக்கஇயலாது என்பதை வெளிப்படுத்தினார். அதன்பின் பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தி, மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாக கூறி உரையை முடித்துக் கொண்டார்.

அதன்பின், பேரவைத்தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்.

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசித்துமுடித்ததும், பேரவை நிகழ்ச்சிநிரல்படி, தேசிய கீதத்துக்காக ஆளுநர்எழுந்தார். ஆனால், திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்குப் பதிலாக, பேரவைத்தலைவர் ஆளுநருக்கு எதிராக, அவர் நாதுராம் கோட்சே உள்ளிட்ட பலரை பின்பற்றுவதாக அவதூறு பேச்சைத் தொடர்ந்தார். பேரவைத் தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால், அவரது பதவியின் கவுரவத்தையும், பேரவையின் மாண்பையும் குறைத்து விட்டார்.

பேரவைத்தலைவர், ஆளுநர் மீது கடுமையான தாக்குதல்களை வெளிப்படுத்திய நிலையில், தனது பதவி மற்றும் பேரவையின் கண்ணியம் கருதி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x