Published : 13 Feb 2024 04:55 AM
Last Updated : 13 Feb 2024 04:55 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.
அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றவழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிஅசோக் குமார் தொடர்புடையஇடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றதடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 13-ம்தேதி சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைநடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட சோதனை அடுத்த நாள் வரை நீடித்தது. இறுதியாக ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் இதயஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில வாரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் சென்னைபுழல் மத்திய சிறையில் நீதிமன்றகாவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்துவந்த செந்தில் பாலாஜி அடிக்கடிஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகளை பெற்றுவந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.அவர் பொறுப்பு வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறைஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது.
நீதிபதி கேள்வி.. இந்நிலையில் 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஜன.30-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடைநிலை ஊழியர் ஒருவர் குற்றவழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பின்னர் இந்த வழக்கு விசாரணை பிப்.14-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும்அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இவ்விவகாரம் குறித்து அரசு தரப்பிலோ அல்லது ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இரவு வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT