Published : 13 Feb 2024 05:50 AM
Last Updated : 13 Feb 2024 05:50 AM
சென்னை: கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக,அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை யினர் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச்மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாகநீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
அதன்படி இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது. அப்போது நீதிபதி, சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தது ஏன் என்றும், வழக்குப்பதிவு செய்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார் என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான டெல்லிமூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், இதுதொடர்பாக வழக்கு தொடரஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்குப்பதிலாக சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக தவறு என்பதால்வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என்றநிலையில், முறையான அனுமதியின்றி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்ற நேரத்தை மட்டுமின்றி, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கும் செயல்.
இந்த வழக்கில்ஐ.பெரியசாமியை விடுவித்துசிறப்பு நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. அதில்எந்த தவறும் இல்லை என வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT