Published : 12 Feb 2024 05:45 PM
Last Updated : 12 Feb 2024 05:45 PM
சென்னை: “பேரவைத் தலைவர், முதல்வர், அவை முன்னவர் உள்ளிட்ட சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ‘ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல்’ அரசியல் நாகரிகத்தையும், தமிழர் பண்புகளையும் பாதுகாத்துள்ளனர்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டின் 2024-25 அரசின் இலக்கையும், அதனை அடைவதற்கான கொள்கை வழிகளை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது. கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு கடமையை நிராகரித்து, மரபுகளையும் அத்துமீறி தனது தாழ்ந்த தரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் பேரவைத் தலைவர், முதல்வர், அவை முன்னவர் உள்ளிட்ட சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல், அரசியல் நாகரிகத்தையும், தமிழர் பண்புகளையும் பாதுகாத்துள்ளனர்.
ஆளுநர் உரையில், 'தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றி இருப்பதை அடுக்கடுக்காக எடுத்துரைக்கிறது. வேலை வாய்ப்புக்கும் தொழில் வளர்ச்சிக்கு முதலீடு திரட்டுவதில் சாதனை படைத்திருப்பதை பெருமைபட எடுத்துக் கூறுகிறது. இணைய வழி தற்சார்புத் தொழிலாளர் நலவாரியம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேசமயம் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளிலும், நகராட்சிகளிலும் பணியாற்றும் ஒப்பந்த வெளியிடப் பணியாளர், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் நல வாரியம், ஆளுநர் உரையில் இடம்பெறும் என விவசாயத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் என்பதை அரசு கருத்தில் கொண்டு, முதல்வர் வழங்கும் தொகுப்புரையில் இடம்பெறும் என நம்புகிறோம். மொத்தத்தில் மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT