Published : 12 Feb 2024 04:22 PM
Last Updated : 12 Feb 2024 04:22 PM
கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிட எம்.பி. ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தற்போதைய, முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசினர். அவர்கள் அனைவரும் ‘கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரவேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.
முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனிடம் க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் ‘கரூர் எம்.பி தொகுதியை கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கு பெற்றுத் தரவேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என மாநில தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவரும், ஏஐசிசி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியன் பேசும்போது, “எம்.பி. ஜோதிமணி சரிவர நடந்து கொள்ளாததாலும், மரியாதை கொடுக்காததாலும் கட்சியில் இருந்து பலர் விலகி விட்டனர். தான் என்ற அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்; அதற்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம்” என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. இம்மாத இறுதியில் தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. கரூர் மக்களவை தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கி தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமான முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் கே.சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சியினரிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அனைவரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, அவருக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்க வேண்டாம் என அகில இந்திய, தமிழக தலைமையை கேட்டுக் கொள்வது. எம்.பி. ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் போக்கை வன்மையாக கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேங்க் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர வேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதி மணி சரிவர செயல்படாததால் இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி தலைமை யாரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம். நானும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்” என்றார்.
மாவட்ட துணைத் தலைவர் எம்.சின்னையன், க.பரமத்தி வட்டார துணைத் தலைவர் விசுவை செந்தில் குமார், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கீர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து கருத்தறிய கரூர் எம்.பி. ஜோதி மணியை தொடர்புக் கொண்டபோது, கூட்டம் நடப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தற்போது டூரில் உள்ளதால் பிறகு அழைக் கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT