Published : 12 Feb 2024 02:26 PM
Last Updated : 12 Feb 2024 02:26 PM

“ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை” - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன் | ஆர்.என்.ரவி : கோப்புப் படங்கள்

சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் அமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக் குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழகத்தில் இருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பது என்பது ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை மட்டுமின்றி, ஆளுநர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியல் அமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும் கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராகப் பொது வெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன்மூலம் இங்கே சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இத்தகைய போக்குள்ள ஆளுநர், தொடர்ந்து தமிழகத்தில் இருப்பதே தமிழக மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே ஆளுநர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே ஆளுநர் செயல்படுகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் மத்திய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் மத்திய அரசு பயன்படுத்துகிறது.

மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்க வேண்டும் என ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x