Published : 12 Feb 2024 12:58 PM
Last Updated : 12 Feb 2024 12:58 PM
சென்னை: "ஆளுநர் மரபை மீறவில்லை. சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்." என்று பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டமன்றத்துக்கு வெளியே, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “நாங்கள் முறைப்படிதான் நடந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டு, சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தி சபாநாயகர் சபையில் இல்லாத மரபுகளை செய்திருக்கிறார். புதிதாக அறிமுகம் செய்கிறார். சபாநாயகர் பேச்சை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்திருக்க முடியும். முறைப்படி நடக்கின்ற கூட்டம் என்பதால் வெளிநடப்பு செய்யவில்லை. எனினும், சவர்க்கர் மற்றும் கோட்சே பெயரை குறிப்பிட்டு பேசியதை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநர் ரவி மரபுப்படி நடந்துகொண்டார். சபாநாயகர் மரபை மீறி நடந்துகொண்டதால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறினார். நாங்களும் வெளிநடப்பு செய்திருக்க முடியும். ஆனால் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை. ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவைகுறிப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும், சபாநாயகருக்கு உரிமையுள்ள அவையில் அவர் சொல்வதே தீர்ப்பு என்பதால் ஆளுநர் பேச்சு இடம்பெறவில்லை.
அரசு தனது திட்டங்களையும், கொள்கைகளையும் அரசின் உரையாக எழுதி கொடுப்பதை ஆளுநர் வாசிக்க வேண்டும். அதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் உரையில் குறைகள் இருப்பின் அவற்றில் திருத்தம் செய்ய ஆளுநர் கூறுவார். ஆனால், ஆளுநர் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாததாலும், சபாநாயகர் சவர்க்கர் மற்றும் கோட்சே வார்த்தைகளை பயன்படுத்தியதாலும், சபை மரபை மீறி நிதி தொடர்பான கோரிக்கை வைத்ததன் காரணமாக ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
அரசின் உரையை முழுமையாக வாசித்து முடித்தபின் தேவையில்லாத வார்த்தைகளை பேசியதால் தான் ஆளுநர் எழுந்து சென்றார். சபாநாயகர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் ஆளுநர் முழுவதுமாக இருந்திருப்பார். ஆளுநர் உரையில் வெள்ளம் குறித்து பேசியிருந்தும், உரை முடிந்த பின் தேவையில்லாமல் பேசியதால்தான் முரண்பாடு. எந்த மாநிலத்திலும், எந்த சபாநாயகரும் இப்படி நடந்துகொண்டதில்லை. ஆளுநர் மரபை மீறவில்லை. சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி பிரச்சினையை சரி செய்துவிட்டார்கள். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கேட்டது முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது. ஆளுநர் கேட்டதில் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT