Published : 12 Feb 2024 12:17 PM
Last Updated : 12 Feb 2024 12:17 PM
சென்னை: எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத திமுக அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை ஆளுநர் உரையில் வாரி இறைத்திருக்கின்றது. திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்வரும் ஆண்டில் ஆளும் அரசு என்னென்ன நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்க உள்ளது என்பதை சுருக்கமாக கூறுவதுதான் மரபு. ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில், எந்தவிதமான குறிப்பும் இல்லை. இந்த அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இல்லை. எனவே இந்த விடியா ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்த ஆளுநர் உரை உள்ளது. எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு, பசப்பு வார்த்தை ஜாலங்களை வாரி இறைத்திருக்கின்றது.
எனது ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்வது மட்டுமல்லாமல். ஆளுநரைக் கொண்டு தடவிக் கொடுக்கச் செய்வது வெட்கக் கேடானது. சுருக்கமாக, திமுக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரை, உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம்” என்றார்.
பின்னர் ஆளுநர் 4 நிமிடத்திலேயே உரையை முடித்துக் கொண்டது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், “அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்சினை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் எதிர்க்கட்சி. சபாநாயகர் அப்பாவு பலமுறை சட்டப்பேரவை மரபுகளை கடைபிடிப்பதில்லை. இனியாவது அவற்றை சபாநாயகர் கடைபிடிப்பார் என்று நம்புகிறேன். அவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைபட்சமாக நடக்கின்றபோது, என்ன செய்வதென்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT