Published : 12 Feb 2024 11:41 AM
Last Updated : 12 Feb 2024 11:41 AM

“சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல...” - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி

சபாநாயகர் அப்பாவு

சென்னை: “சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “ஆளுநர் உரைக்கு முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. ஆளுநரை முறைப்படி அழைத்துவந்தோம். தமிழக அரசின் உரையை வாசிப்பதற்காக இந்த அவைக்கு ஆளுநர் வருகை தந்தார். வந்த இடத்தில் குறைவாக வாசித்தார். அதை குறையாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தேசிய கீதத்தை முதலில் பாடியிருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சொன்னார்கள். எல்லோருக்கும் நிறைய கருத்துக்கள் உண்டு. அவற்றையெல்லாம் பேசுவது மரபல்ல.

இந்த அரசு, முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாறுபட்ட கருத்துகள், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும். உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் தமிழக அரசின், முதல்வரின் பண்பு. அதில் மாற்றமில்லை. ஆளுநர், அவர் மனதில் இருப்பதை சொன்னார்.

ஆளுநரை நான் அன்போடு கேட்பது இது தான். எங்கள் மனதில் இருப்பது என்னவென்றால், "எவ்வளவோ பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் "PM care fund"-ல் உள்ளது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாமே. சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சை தொடர்ந்து ஆளுநர் உரையை பதிவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் கிளம்பும்போது, “தேசிய கீதம் இனிதான் பாடுவார்கள்” என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு. எனினும், ஆளுநர் நிற்காமல் அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x