Published : 12 Feb 2024 11:12 AM
Last Updated : 12 Feb 2024 11:12 AM

“அரசின் உரையுடன் உடன்படவில்லை” - தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன?

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவையில் சில நிமிடங்கள் அவர் பேசிய விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

ஆளுநர் பேசிய அந்த சில நிமிடங்கள்.. அவை கூடியவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி. 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.

நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி” என்று கூறி தனது உரையை முடித்தார்.

அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்கும் நேரத்தில், உரையைப் புறக்கணித்த ஆளுநர் ரவி, அவையிலேயே இறுக்கத்துடன் அமர்ந்திருக்கிறார். அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு முன்னரே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x