Published : 12 Feb 2024 10:32 AM
Last Updated : 12 Feb 2024 10:32 AM
சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை தொடங்கியது. அப்போது, தமிழில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது அவர், “தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உரையைப் புறக்கணித்தார். அப்போது அவையில் சில விநாடிகள் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் சபாநாயகர் குறுக்கிட்டு உரையைத் தான் வாசிப்பதாகக் கூறி வாசித்தார்.
திருக்குறளுடன் தொடங்கினார்..பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. என்ற திருக்குறளை கூறி ஆளுந ரவி உரையை தொடங்கினார். பின்னர் தேசிய கீதம் குறித்த குற்றச்சாட்டை கூறி சில நிமிடங்களில் உரையை முடித்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிப்பாரா, புறக்கணிப்பாரா என முன் கூட்டிய விவாதங்கள் எழுந்த நிலையில் பரவலாக பேசப்பட்டது போலவே ஆளுநர் அரசு தயாரித்த உரையைப் புறக்கணித்துள்ளார்.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
இந்தச் சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது உறுதியானது. பேரவை தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் மாளிகைக்கு சென்று, பேரவை கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT