Published : 11 Feb 2024 04:00 PM
Last Updated : 11 Feb 2024 04:00 PM
கிருஷ்ணகிரி: "அதிமுக இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். எந்த நேரத்தில் அமைக்க வேண்டுமோ சரியான நேரத்தில் அமைப்போம். திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. 10 நாட்களாக நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "இன்னும் பாஜகவுடன் அதிமுக மறைமுகமாக உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறி வருகின்றனர். நான் ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுகவின் முன்னணி தலைவர்களும் இதை தெளிவுபடுத்திவிட்டார்கள். அதிமுகவைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 25.09.2023 அன்று, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாங்கள் அறிவித்தோம்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அதிமுக இல்லை. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதமே அதிமுகவால் அறிவிக்கப்பட்ட செய்தி இது. அதன்பிறகு, கிட்டத்தட்ட 5 மாத காலமாக, வேண்டுமென்றே திட்டமிட்டு ஊடங்கங்களிலும் பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு இறுதியாகவும் உறுதியாகவும் சொல்கிறோம், அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை. இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியைக் கேட்காதீர்கள். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் இனி எப்போதும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், அதிமுக இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். எந்த நேரத்தில் அமைக்க வேண்டுமோ சரியான நேரத்தில் அமைப்போம். திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. 10 நாட்களாக நடைபெறும் அக்கூட்டணியின் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏற்கெனவே, அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கிய இடங்களைக் கொடுக்க மறுக்கும் கட்சிதான் திமுக. அந்த கூட்டணியில் எத்தனைக் கட்சிகள் இருக்கும், இல்லாமல் போகும் என்பது இன்னுமொரு 10 நாட்களில் தெரிந்துவிடும். திமுகவைப் பொறுத்தவரை, கூட்டணியை நம்பித்தான் இருக்கிறது. மக்களை நம்பி இல்லை. அதிமுக மக்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் முடிவுதான் இறுதியானது. வாக்களிக்கும் மக்களைத்தான் எஜமானர்களாக நாங்கள் எண்ணுகிறோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT