Published : 11 Feb 2024 03:10 PM
Last Updated : 11 Feb 2024 03:10 PM

வரும் 16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள்: துரைமுருகன் அறிவிப்பு

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக திமுக சார்பில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சி முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கட்சி முன்னணியினர், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைவரின் குரலாக வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.

வரும் 16ம் தேதி, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். வரும் 17-ம் தேதி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், அரக்கோணம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், வரும் 18-ம் தேதி, திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம் மற்றும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x