Published : 11 Feb 2024 06:19 AM
Last Updated : 11 Feb 2024 06:19 AM
சென்னை: சென்னை தங்கசாலையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார். அதேநேரம், சென்னையில் அண்ணாமலை நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், மக்களவைத் தேர்தலையொட்டியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என்மண்; என் மக்கள்’ எனும் பெயரில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்தின்போது மக்களைச் சந்திக்கும் அண்ணாமலை, திமுக - அதிமுகவை விமர்சிப்பதோடு, தமிழகத்துக்கு மத்திய அரசுகொண்டு வந்துள்ள திட்டங்களையும் எடுத்தக் கூறி மக்களவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் நடைபயணத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந் தது. நடைபயணத்தில் பாஜக தேசியதலைவர் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு நாகராஜன், மத்திய சென்னை மக்களவைதொகுதி அமைப்பாளர் வினோஜ்பி.செல்வம், மாவட்டத் தலைவர் கே.விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் கவனித்து வந்தனர்.
அதன்படி, அண்ணாமலை நேற்று 93-வது நாளாக உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். நடைபயணத்தில் பாஜக தேசிய தலைவர்ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருந்தனர்.
அமைந்தகரையில் அனுமதி மறுப்பு: நடைபயணத்தின் முடிவில், அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் திடலில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அண்ணாமலையின் நடைபயணத்துக்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். மேலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அமைந்தகரையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
அதேநேரம், பொதுக்கூட்டத்தை தங்கசாலையில் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஜெ.பி.நட்டா, அண்ணாமலை, எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நட்டாவுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு: பொதுக்கூட்டம் முடிந்த பின், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையே, நட்டாவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்துபேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து,மேலும் சில கட்சித் தலைவர்களும் நட்டாவை சந்திக்க வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT