Published : 26 Feb 2018 11:17 AM
Last Updated : 26 Feb 2018 11:17 AM

100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் பாம்பன் ரயில் பாலம்: யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். 2.3 கி.மீ. நீளமுள்ள இப்பாலத்தை கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி புயல்

1964–ம் ஆண்டு டிசம்பரில் வீசிய புயலில் துறைமுக நகரமான தனுஷ்கோடி முற்றிலும் அழிந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. அப்போது இன்ஜினீயர் ஸ்ரீதரன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சில மாதங்களிலேயே பாலத்தை சீரமைத்தது.

மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பாம்பன் பாலத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2007-ம் ஆண்டில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

நூற்றாண்டு தபால் தலை

பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டு நூறாண்டுகள் கடந்ததை முன்னிட்டு 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. பாம்பன் ரயில்வே பாலத்தின் நூற்றாண்டு பெருமையை குறிக்கும் வகையில் தபால்தலையும் வெளியிடப்பட்டது.நூறாண்டுகளை கடந்துவிட்ட இந்த ரயில் பாலத்தை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x