Published : 10 Feb 2024 11:29 AM
Last Updated : 10 Feb 2024 11:29 AM

அதிக எதிர்பார்ப்பில் கூட்டணி கட்சிகள்: தொகுதி உடன்பாடு திமுகவுக்கு பெரும்பாடு

தமிழகத்தில், திமுக தலைமையில் இண்டியா கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. திமுக சார்பில் தொகுதி பங்கீட்டுக்கு குழு அமைக்கப்பட்டு, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த 2019-ல் தமிழகம், புதுச்சேரியும் சேர்த்து 40 தொகுதிகளில் திமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக தலா 2 ,மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேகே தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

இதில் கணேசமூர்த்தி (மதிமுக) , சின்ராஜ் (கொமதேக), ரவிக்குமார்(விசிக) மற்றும் பச்சமுத்து (ஐஜேகே) ஆகிய 4 பேரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதையடுத்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி வியூகத்துடன் திமுக களமிறங்கியுள்ளது. இதில், தற்போது ஐஜேகே இல்லை.

அதற்கு பதில் கமல்ஹாசனின் மநீம இணைய உள்ளது. இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்து பேச திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்டணிக் கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்தகட்டமாக இன்று காங்கிரஸ், 12-ல் விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் கட்சிகள் சேராத நிலையில், திமுகவில் கூடுதல் தொகுதிகளுடன், திமுக போட்டியிடும் தொகுதிகளையே கூட்டணி கட்சிகள் குறிவைத்துள்ளதாலும், கூட்டணி கட்சிகளின் தொகுதிகளில் சிலவற்றில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் தெரிவித்து வருவதாலும் விரைந்து முடிவு எடுப்பதில் சுணக்கம் ஏற்படலாம் என தெரிகிறது.

இந்த தேர்தலை பொறுத்தவரை, உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக உள்ளது.

இதனால் அதிகபட்சமாக 24 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 6 மற்றும் புதுச்சேரி, மதிமுகவுக்கு 1 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் மக்களவை, மாநிலங்களவை தலா 1, விசிக 2, கொமதேக 1, மநீம 1, ஐயுஎம்எல் 1 என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 10 தொகுதிகளை விட கூடுதலா 2 தொகுதிகளையும் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதலாக சில தொகுதிகளையும் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, மநீம தரப்பில் 3 தொகுதிகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. இவை மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சியும் ஒரு தொகுதியாவது வேண்டும் என்று கேட்கிறது.

இதுமட்டுமின்றி, திமுக நேரடியாக போட்டியிடும் 24 தொகுதிகளை தவிர்த்து கூடுதலாக 4 அல்லது 5 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினரை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், மதிமுக, விசிக கட்சிகளும், மநீம கட்சியும் தங்கள் சின்னத்தில் போட்டியிடவே திட்டமிட்டு பேசி வருகின்றன. இந்த சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது தொகுதிகளை மாற்றி கேட்பதும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது,‘‘ அடுத்தகட்டமாக முதல்வர் நேரடியாக அமர்ந்து பேசும்போது முடிவு எட்டப்படும். இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதற்காக வழங்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் திருப்தியடைவார்கள். பிப்.20-ம் தேதிக்குள் இறுதி நிலவரம் தெரிந்துவிடும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x