Published : 10 Feb 2024 11:38 AM
Last Updated : 10 Feb 2024 11:38 AM

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எழுதியிருக்கும் கடிதத்தில், “மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் , 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் பிரதமர் உடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கின்றோம்.

மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும்.

எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x