Published : 10 Feb 2024 08:50 AM
Last Updated : 10 Feb 2024 08:50 AM

தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்கும் பாஜக: விருதுநகர், திருச்சியில் இன்று தொடக்கம்

சென்னை: தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பாஜக கேட்கவுள்ளது. முதற்கட்டமாக இப்பணி விருதுநகர், திருச்சியில் இன்று தொடங்குகிறது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்திலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி,தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்துக்கான சிறப்பு திட்டங்களை தேர்தல்அறிக்கையில் இடம்பெற வைப்பதற்கான பணிகளை பாஜகவும் தொடங்கியுள்ளது. இதற்காக, மக்களவை தேர்தல் மேலாண்மைக் குழுவை பாஜக நியமித்துள்ளது.

ஹெச்.ராஜா தலைமையில் குழு: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.பி எஸ்.கே.கார்வேந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைக் கேட்க உள்ளது.

முதல்கட்டமாக விருதுநகர் மற்றும் திருச்சியில் இன்று பொதுமக்களை இக்குழு சந்திக்கிறது. காலையில் விருதுநகரில் வணிகர்கள், குறு, சிறு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், பட்டாசு ஆலை நிறுவனங்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து கருத்துகளை கேட்கிறது.

மாலையில் திருச்சி செல்லும்இந்தக் குழு, விவசாயிகள், முன்னாள் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர், விவசாய சங்கங்களைச் சந்திக்கிறது. தேர்தல் அறிக்கையில் விவசாயம் தொடர்பான புதிய திட்டங்கள் இடம்பெற வைப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

12-ம் தேதி சென்னை: இதைத்தொடர்ந்து, வரும் 12-ம்தேதி சென்னையில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர். பொருளாதாரக் கொள்கை, வரி விதிப்புகள், ஸ்மார்ட் சிட்டிதிட்டங்கள், மழைநீர் வடிகால்வாய்,புதிய திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்பட சென்னைமக்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்க இருப்பதாக பாஜக வினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x