Published : 10 Feb 2024 06:25 AM
Last Updated : 10 Feb 2024 06:25 AM
சேலம்/சென்னை: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் (பொ) தங்கவேல், வரும்29-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை பணி ஓய்வுபெற அனுமதிக்காமல், பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று பல்கலை. துணைவேந்தருக்கு, உயர்கல்வித் துறைச் செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை. அலுவலர்கள் மீது, பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, உயர்கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், உயர்கல்வித் துறை செயலர் த.கார்த்திக், சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலை. பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) கு.தங்கவேல், பணியாளர் நியமனம், பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்தன.
அவற்றின் மீது விசாரணைநடத்த உயர்கல்வித் துறை சார்பில், 2023 ஜனவரி 9-ம் தேதி குழு அமைக்கப்பட்டது. உயர்கல்வித் துறை கூடுதல் செயலராகப் பணியாற்றிய சு.பழனிசாமி, இணைச்செயலர் (தற்போது கூடுதல் செயலர்) ம.இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழு கடந்த 5-ம் தேதி விசாரணை அறிக்கையை உயர்கல்வித் துறையிடம் சமர்பித்தது. அதில், பணி நியமனம் உள்ளாட்சி தணிக்கைத் துறையின் தடையில் இடம் பெற்றதும், அதை நீக்கியதும் நிரூபணமாகியுள்ளது. இதுசட்டப்படி தவறானது.
அதேபோல, துறைக்கு வேண்டிய அனைத்து அறைகலன்களும் ஒரே நிறுவனத்தில் கொள்முதல் செய்தது, ஒரே ரசீதுக்கு 2 முறை பணம் பெற்றது. வளாகத்தில் வைஃபை நிறுவுதல், பராமரித்தல், அதற்கான வன்பொருள், மென்பொருள் கொள்முதலில் முறைகேடுகள், கணிப்பொறி, இணையம், ஆட்டோமேஷன், வெப் சர்வீஸ்கள் கொள்முதலில் நிதி முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
சென்னை நிறுவனத்திடம் மென்பொருள் வாங்கி செயல்படாமல் இருப்பது, டெபிட் கார்டு வாங்கப்பட்டு செலவுகள் மேற்கொள்ளப்பட்டது, பல்கலை. பணிகள் குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடுகள் உட்பட8 வகையான புகார்கள் நிரூபணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு விரிவான விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு அறிக்கையின்படி, பதிவாளர் தங்கவேல் மீது நிரூபணமான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானதாகும். இதற்கிடையே, அவர் வயது முதிர்வு காரணமாக வரும் 29-ம் தேதி பணி ஓய்வுபெற உள்ளார். எனினும், தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, அவரை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்காமல், பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT