Published : 10 Feb 2024 06:12 AM
Last Updated : 10 Feb 2024 06:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை கைப்பற்ற திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை காங்கிரசும், 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், பார்வர்ட் பிளாக், சுயேச்சை வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியை திமுக பெரும்பாலும் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அதிக முறை ஒதுக்கியுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மக்க ளவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4-ல் திமுகவும், 2-ல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
அதனால், மக்களவைத் தேர்தலில் இத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று திமுகவினர் கருதுகின்றனர். ஏற்கெனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் பொது மேடைகளில் இம்முறை ராமநாதபுரம் தொகுதியில் திமுகதான் போட்டியிடும் என கூறி வருகிறார்.
இதனால் சிட்டிங் எம்பியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனிக்கும், அமைச்சருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. ஒரு முறை ராமநாதபுரத்தில் நேருக்கு நேர் இருவரும் ஒருமையில் பேசிக்கொண்ட சம்பவமும் நடந்தது.
இந்நிலையில் நவாஸ்கனி எம்.பி. தான் செய்த சாதனைகளை மக்களிடம் கூறி, இத்தொகுதியில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார். அதற்காக தனது கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மூலம் திமுகவிடம் தனக்கு சீட் பெற்று தர முயற்சித்து வருகிறார்.
ஆனால் அமைச்சரும், திமுகவினரும் இந்த முறை ராமநாதபுரத்தை திமுகவுக்கு பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். திமுக மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி இத்தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் ஆதரவாக உள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT