Published : 05 Aug 2014 03:40 PM
Last Updated : 05 Aug 2014 03:40 PM

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் : ஆட்சியரிடம் 17 பேர் ஒப்பளிப்பு கடிதம் வழங்கினர்

இருக்கும் உடலோ ஊனம், அந்த உடலையும் வீணடிக்க விரும்பாத கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் 17 பேர், தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஒப்பளிப்பு கடிதத்தை கடலூர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.

கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள், ஆட்சியர் குறைகேட்புக் கூட்ட அரங்கு அருகே காத்திருந்தனர்.

அவர்களிடம், ‘என்ன வேண் டும்’ என ஆட்சியர் சுரேஷ்குமார் கேட்டார். அதற்கு அவர்கள், ‘தற் போது எங்களுக்கு எதுவும் தேவை யில்லை, நாங்கள் கொடுக்கும் உடல் உறுப்புக்களை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர், முதல் கட்டமாக உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்த 17 பேரின் ஒப்பளிப்பு கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் குமாரிடம் கேட்டபோது, ‘விபத்தினாலும், நோயினாலும் உடல் உறுப்புக்களை இழக்கும் பலர் உயிரிழக்கும் சம்பவம் எங்களை பாதிக்க வைத்துள்ளது. எனது சகோதரர் ஒருவர் சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் கிடைக்காமல் அவதிப்பட்டார். இறந்த பிறகு இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. அதனால் யாருக்கும் பயனில்லை. எங்களால் காசு பணம் கொடுக்க இயலாது. கடவுள் கொடுத்தது இந்த ஊனமான உடலைத்தான். உடல் தான் ஊனமே தவிர எங்களது உள் உறுப்புகள் நன்றாக உள்ளன. உடல் ஊனமுற்றோர் என்ற அடையாளத்துடன் வாழும் நாங்கள், எங்களுக்குப் பிறகு சராசரி மனிதன் உடலில் உறுப்புகளாக வாழ வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x